Saturday, July 11, 2015

வலு சேர்க்கும் சத்து பானங்கள்!

கோடை காலத்தில் குளுகுளு குளிர்பானத்தைத் தேடி ஓடுவதும், குளிர்காலத்தில் சூடான டீ, காபி அருந்துவதுமாகக் காலச்சூழலுக்கேற்ப உடலின் தேவைக்கான பானங்கள் வித்தியாசப்படும். ஆனால், சுவை மிகுந்த சத்தான பானங்களை மட்டும் எல்லாக் காலங்களிலும் அருந்தலாம். இதனால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உற்சாகத்துடனும் தெம்புடனும் செயல்பட முடியும். சில சத்தான பானங்களைச் செய்து காட்டி அதன் பலன்களைக் கூறுகின்றனர் ஊட்டச்சத்து நிபுணர் தில்சாத் பேகம் மற்றும் உணவியலாளர் ராஜா முருகன்.
ரோஸ் சர்பத்
தேவையானவை: கழுவி சுத்தம் செய்து உலர்ந்த ரோஜா இதழ் - 2 கப், சர்க்கரை/வெல்லம் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சை, மாதுளம்பழம் - தலா 2.
செய்முறை: ரோஜா இதழை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.  இதில், ஒரு கப் சுடுநீரை ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கவும். இரவு முழுவதும் மூடிவைக்கவும். மறுநாள் காலை, ஒரு மெல்லிய பருத்தித் துணியால் வடிகட்டி, வெல்லம் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதில், எலுமிச்சைச் சாறு, மாதுளை பழச்சாறை ஊற்றி நன்றாகக் கலக்கவும். குளிர்ந்த நீர், ஐஸ் கட்டிகள் சேர்த்துப் பருகினால் மேலும் சுவையாக இருக்கும். 3-4 நாட்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.
பலன்கள்:  உடல் சூட்டின் காரணமாக ஏற்படும் கட்டிகள், கொப்புளங்களைக் குறைக்கும். உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். எப்போதும் முகம் பொலிவுடன் இருக்கும்.
வெற்றிலை பானகம்
தேவையானவை: வெற்றிலை - 7, காய்ச்சிய பால் - 2 கப், சப்ஜா விதை - அரை டீஸ்பூன், ரோஸ் சிரப் - சிறிதளவு, குல்கந்து - 4 டீஸ்பூன், நறுக்கிய டிரை ஃப்ரூட்ஸ் - 3 டீஸ்பூன் (பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர்ந்த அத்திபழம்)
செய்முறை: வெற்றிலையைக் கழுவி, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மசிய அரைக்கவும். இதில், பால், குல்கந்த் சேர்த்துக் கலக்கவும். தண்ணீரில் ஊறவைத்த சப்ஜா விதையைச் சேர்த்து, ரோஸ் சிரப்பை ஊற்றி, நறுக்கிய டிரை ஃப்ரூட்ஸை சேர்த்து, குளிரவைத்துப் பரிமாறவும்.
பலன்கள்: வெற்றிலை வாய் துர்நாற்றத்தைப் போக்கும், பல் ஈறுகளில் உள்ள நீர் வறட்சியைத் தடுக்கும். சப்ஜா விதையில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால், ரத்த சோகை வராமல் காக்கும்.
கறிவேப்பிலை சாறு
தேவையானவை: கறிவேப்பிலை - ஒரு கட்டு, வெல்லம் - 100 கிராம், ஏலக்காய் - 2, இஞ்சி - சிறிதளவு. செய்முறை: கொடுத்துள்ள அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து, வடிகட்டி அருந்தலாம்.
பலன்கள்: இரும்புச் சத்து, வைட்டமின் - ஏ, நீர்ச்சத்து, மற்றும் கலோரி நிறைந்த பானம் இது. பித்தத்தைத் தணிக்கும். கண் பார்வைக்கு மிகவும் நல்லது.
நிலக்கடலைப் பால்
தேவையானவை: நிலக்கடலை - 100 கிராம், வெல்லம் - 50 கிராம், தேங்காய்பால் - ஒரு கப், ஏலக்காய், சுக்கு - சிறிதளவு, வாழைப்பழம் - 1.
செய்முறை: நிலக்கடலையை முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறிய கடலையின் தோல் நீக்கி, தேங்காய் பால், வெல்லம், வாழைப்பழம், ஏலக்காய், சுக்கு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டி அருந்தலாம்.  
பலன்கள்: நிலக்கடலையில் உள்ள புரதமும் வெல்லத்தில் உள்ள இரும்புச் சத்தும் உடலுக்கு வலுவை கூட்டும். வாழைப்பழம் சேர்ப்பதால், வயிற்றுப் பிரச்னையைச் சரிசெய்யும். சர்க்கரை நோயாளிகள் இந்தப் பானத்தைத் தவிர்ப்பது நல்லது.
இஞ்சி - கற்றாழை சாறு
தேவையானவை: கற்றாழை ஜெல் - 100 கிராம், எலுமிச்சம் பழம் - 1, வெல்லம் - 50 கிராம், இஞ்சி, உப்பு - சிறிதளவு.
செய்முறை: எலுமிச்சை சாறு, வெல்லம், உப்பு, இஞ்சி இவற்றை மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். கடைசியில் கற்றாழை ஜெல்லை சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும்.
பலன்கள்: கற்றாழை, சரும நோயை சரிப்படுத்தும். தொடர்ந்து பருகினால், தாம்பத்திய உறவு சிறப்பாக இருக்கம்.  
ஜூஸ் டிப்ஸ்
 திட  உணவை தவிர்த்து, தண்ணீர், பழச்சாறு போன்ற திரவ உணவை அதிகம் உட்கொள்ளலாம்.
 தேனீர், காபி போன்றவற்றை தவிர்க்கவும். இதுவும், அதிகப் படியான பித்தத்துக்கு ஒரு காரணம்.
 காலை உணவை சாப்பிட பிடிக்காதவர்கள்,  இந்த பானங்களை காலை உணவாகக்கூட அருந்தலாம். சுறுசுறுப்பாக செயல் பட உதவும்.
- புகழ்.திலீபன், படங்கள்:  தி.குமரகுருபரன்


No comments:

Post a Comment