Saturday, July 25, 2015

கம்பு ரொட்டிப் பிரட்டல்

திக அளவில் பயிரிடப்படும் சிறு தானியங்களில் கம்புதான் முதல் இடம். வறண்ட பகுதியில்கூட விளையும் தன்மை கொண்டது. கால்சியம், இரும்புச்சத்து மிக அதிகம்.
பலன்கள்
கம்பில் இரும்பு, மக்னீசியம், வைட்டமின் பி மற்றும் சி போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இதனால், உடலுக்கு அதிகம் வலு சேர்க்கும்.
சருமம், பார்வைத்திறன் மேம்படத் தேவைப்படும் வைட்டமின் A உருவாக முக்கியக் காரணியான பீட்டாகரோட்டீன் இதில் அதிகம் இருக்கிறது. அரிசியைக் காட்டிலும் எட்டு மடங்கு இரும்புச்சத்து கம்பில் உள்ளது. ரத்தசோகை வராமல் தடுக்கும். அதிக வைட்டமின் சத்துக்கள் இருப்பதால், வைட்டமின் சத்துக் குறைபாட்டால் ஏற்படும் நோயைச் சரி செய்கிறது.
வேண்டாத கொழுப்புகளைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு மிகவும் ஏற்றது. பற்கள், எலும்புகள் நல்ல உறுதியாக இருக்க உதவுகிறது. வயிற்றுப் புண், குடல் புண், அஜீரணக் கோளாறு நீங்கும். உடல் உஷ்ணம் குறையும்.

கம்பு ரொட்டிப் பிரட்டல்

300 கிராம் கம்பு மாவை, சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து, பதமாக இட்டு, தோசைக் கல்லில் இருபுறமும் ரொட்டி போல் சுட்டு எடுக்கவும். பிறகு, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், 3 கீறிய பச்சை மிளகாய், 2 நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, நன்றாக வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும், 2 நறுக்கிய தக்காளி, கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வாசம் போக வதக்கவும். நறுக்கி வைத்துள்ள கம்பு ரொட்டி துண்டுகளை சேர்த்துக் கிளறவும். சுவையான கம்பு ரொட்டிப் பிரட்டல் தயார்.
22/07/2015

No comments:

Post a Comment