Saturday, July 25, 2015

சாமைக் காரப் புட்டு

சத்தான சிறுதானியங்களில் தினமும் சமைத்து சாப்பிடக்கூடிய உணவு சாமை. இதில் இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. ட்ரைகிளசரைடு என்ற கெட்ட கொழுப்பு குறைவாக உள்ளது.
பலன்கள்
சாமையை உணவாக எடுத்துக்கொள்ளும்போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதனால், செல் சிதைவடைவது கட்டுப்படுத்தப்படும். பொதுவாக வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னைதான் பெரிய சிக்கலாகவே இருக்கிறது. உடலிலிருந்து கழிவுகள் சரிவர வெளியேறாமல் போனால் அதுவே பல்வேறு நோய்களுக்கு மூலக்காரணியாக அமைந்துவிடும்.

சாமை அரிசியில் செய்யப்படும் உணவுகள், மலச்சிக்கலைத் தடுப்பதுடன் வலுவைக் கூட்டும் உணவாகவும் இருக்கிறது. வயிறு தொடர்பான அனைத்துப் பிரச்னைக்கும் சாமை அரிசி சிறந்த மருந்தாக இருக்கிறது. ரத்தசோகையைத் தடுக்கிறது. உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில், சாமை முக்கியப் பங்கு வகிக்கிறது.

செய்முறை

500 கிராம் சாமை அரிசி மாவைச் சலித்து, ஒரு டீஸ்பூன் சீரகம், தேவையான உப்பு சேர்த்துக் கலக்கவும். இதில் தண்ணீர் சேர்த்து, புட்டு பதத்துக்குப் பிசைந்து ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சிறிது கடுகு, ஒரு டீஸ்பூன் உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, 4 வெங்காயம் (பொடியாக நறுக்கியது), 4 காய்ந்த மிளகாய், 1 தக்காளி (பொடியாக நறுக்கியது), சிறிது உப்பு சேர்த்து நன்றாகச் சுருள வதக்கவும். பிறகு, வேகவைத்த சாமைப் புட்டைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி, இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் மூடி, வேகவிட்டு எடுக்கவும்.15/07/2015

No comments:

Post a Comment