Monday, December 29, 2014

இதயம் காக்கும் மிளகு

பத்து மிளகைப் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது யாவரும் அறிந்த பழமொழி. உணவிலுள்ள நச்சு, சிறு உயிரினங்களின் நச்சு, இரச பாசாணம் மற்றும் ஈடு மருந்துகளின் நச்சுத்தன்மை போன்ற எல்லா விதமான நச்சுக்களை நீக்கி உயிர்காக்கும் உன்னத மூலிகையான மிளகு நறுமணப் பொருட்களின் மன்னன் என்றழைக்கப்படுகிறது.
மிளகின் தாவரவியல் பெயர் Piper Nigrum. இது வெப்பமும் ஈரமும் கலந்த தட்பவெப்ப நிலமான கேரளாவில் இந்திய மொத்த விளைச்சலில் 96 விழுக்காடு விளைகிறது. 3.5 விழுக்காடு கர்நாடகாவில் விளைகிறது மீதம் உள்ளது தமிழகம் மற்றும் புதுவையில் விளைகிறது. 1947 ம் ஆண்டு கணக்கின் படி மொத்த நறுமணப்பொருட்களின் ஏற்றுமதி வருவாய் 54.86 கோடி அதில் மிளகுமட்டும் 29.53 கோடிக்கு ஏற்றுமதியாகியிருக்கிறது.
இதிலிருந்து பைப்ரின் என்ற ஆல்கலாய்டு பிரித்தெடுக்கப்பட்டு நோய் நீக்கும் மருந்துகள், பூச்சிகொல்லி மருந்துகள் மற்றும் பிராந்தி எனும் மதுவகைக்கு உறைப்புத்தரவும் பயன்படுத்தப்படுகிறது.
எகிப்தியர்கள் சவங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தினார்கள். ஆசியர்கள் இதனை ஆண்மைபெறும் மருந்தாகப் பயன்படுத்தினார்கள். இறைச்சி போன்ற அழுகும் பதார்த்தங்களைப் பராமரிக்க மிளகு மிகவும் ஏற்ற சாதனம் என்பது பல நூற்றாண்டுகளுக்குமுன்னரே கண்டறியப்பட்டிருந்தது.
மருத்துவத்திற்கும் உணவில் சுவையும் மணமும் சேர்ப்பதற்கும் அன்றாடம் பயன்படுத்தப்படும் மிளகின் தேவை தற்போது கூடியுள்ளதால் இதன் விலையும் கூடிவிட்டது. எனவே தமிழக விவசாயிகளும் ஏறு கொடியினத்தைச் சேர்ந்த இதனைப் பயிர்செய்வதில் ஆர்வம் காட்டினால் நல்ல எதிர்காலம் உண்டு.
இதன் காய் பழம் கொடியின் தண்டு அனைத்தும் பயன்படுவதால் நல்ல வருமானம் கிடைக்கும். இதன் உலர்ந்த தண்டு செவ்வியம் என்ற பெயரில் பல சித்த ஆயுர்வேத மருந்துகளில் சேர்கிறது.
சுக்கு, மிளகு, திப்பிலி, மூன்றும் சம அளவு சேர்த்துத் உருவாக்கப்படும் திரிகடுகு சூரணம் தமிழ் மருத்துவத்தில் அனைத்து நோய்தீர்க்கும் மருந்துகளுடனும் சேர்த்துத் தரப்படுகிறது.
முதிராத பிஞ்சுக் காய்களைப் பறித்து எலுமிச்சை ஊறுகாய் செய்யும்போது சேர்த்துச் செய்து சாப்பிடலாம். புளி சேர்த்துக் குழம்பு வைத்தும் சாப்பிடலாம். இதனால் வாயு, சீதளம், கபம், செரிமானமின்மை மற்றும் ஏப்பம் நீங்கி நல்லபசியும் நோயெதிர்ப்புத் திறனும் கூடும்.
சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால் என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.
மிளகை சிறிது வறுத்துப் பொடித்துச் சலித்து வைத்துக்கொண்டு பெரும்பாலான உணவுகளில் 1/4 தேக்கரண்டி சேர்த்துக் கலந்து சாப்பிடலாம். தேங்காய்ச் சட்னி மற்ற சட்னி வகைகளில் மிளகாய்க்குப்பதிலாக மிளகைச் சேர்த்து உண்ணலாம். இதனால் உதிரக் குழாய்களின் சுவர்களில் சேர்ந்திருக்கும் கொழுப்புக் கரைந்தோடும். நன்கு செரிக்கும். நோயெதிர்ப்பாற்றல் கூடும். உடலும் மனமும் சோர்வாக அமர்ந்திருப்பவர்களுக்கு மிளகுப் பொடியைத் தேனுடன் கலந்து காலை மற்றும் மாலை தர வெப்பத்தை உண்டுபண்ணி மன எழுச்சியைத் தரும். அடிக்கடி வரும் காய்ச்சலுக்குத் தர நலமாகும். 7 மிளகு 200 மி.லி. அளவு தண்ணீரில் தட்டிப்போட்டு, காய்ச்சி, 50 மி.லி. அளவு சுருக்கி வடித்துத் தேன்கலந்து குடித்தால் குளிர் காய்ச்சல் மற்றும் சளி கட்டுப்படும்.
தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டும் இரச கந்தக மருந்துகளின் வெப்பத்தைத் தாங்க முடியாமலும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் 1 பிடி கணுநீக்கிய அருகன் வேருடன் 7 மிளகு தட்டிப்போட்டு 500 மி.லி. அளவு தண்ணீர் விட்டுக்காய்ச்சி 50 மி.லி. அளவாகச் சுருக்கி வடிகட்டிப் பசு வெண்ணை சிறிது கலந்து குடிக்க மருந்துகளின் நச்சுத்தன்மை முறிந்து நலமடைவார்கள்.
பூரான், சிறுபாம்புக்கடி, வண்டுகடி போன்ற நச்சுக்கடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் காலை 6 மணிக்கும் மற்றும் மாலை 6 மணிக்கும் கற்பூர வெற்றிலையில் 5 மிளகு மடித்து மென்று சாப்பிட நச்சு முறிவு ஏற்படும்.
புளுவெட்டினால் முடியுதிர்ந்த இடத்தில் மிளகு, உப்பு, சின்ன வெங்காயம் சம அளவு எடுத்து அரைத்துத் தடவினால் முடிவளரும்.
மிளகு 100 கிராம் பெருஞ்சீரகம் என்னும் சோம்பு 140 கிராம் பொடியாக வறுத்தரைத்து, அரை லிட்டர் அளவு தேனுடன் கலந்து வைத்துக்கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மூல நோய் தீரும்; நன்கு செரிக்கும்.
எல்லா உணவுவகைகளிலும் காரச் சுவைக்கு மிளகாயை விலக்கி மிளகைக் கூட்டிப் பயன்படுத்துவதால் இதயநோய் வராமல் தடுக்கலாம், சளி, காய்ச்சல், நச்சு, கபம் நன்கு செரிமானமாகி நலமுடன் வாழலாம்.

No comments:

Post a Comment