Friday, January 30, 2015

காடை முட்டை

கோழி முட்டைகளை விட, காடை முட்டையில் மருத்துவ குணங்கள் அதிகம் இருப்பதாக, கால்நடை மருத்துவ பல்கலைக்கழக அதிகாரி தகவல் தெரிவித்து உள்ளார்.
காடை முட்டை பயன்பாடு அதிகரிப்பு
இறைச்சிகளை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வித விதமான இறைச்சிகளை பலர் விரும்பி சாப்பிடுகிறார்கள். அந்த வகையில் காடை இறைச்சி சற்று பிரபலமாக கருதப்படுகிறது. சாலையோர தள்ளுவண்டி கடைகள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை காடை இறைச்சிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
காடை இறைச்சியை போல், அதன் முட்டையும் சமீப காலமாக பிரபலமடைந்து வருகிறது. இந்த முட்டையை சாப்பிடுவது உடலுக்கு நன்மை தருமா? என்பது நம்மில் பலருக்கு தெரியாது. இது குறித்து கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மைய தலைவர் டாக்டர் பீர்முகமதுவிடம் கேட்டபோது, ‘கோழி முட்டைகளை விட, காடை முட்டைகளில் உடலுக்கு வலு சேர்க்கும் பல்வேறு சத்துகள் பொதிந்து இருக்கின்றன’ என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:-
13 சதவீத புரத சத்துகள்
காடைகள், ஒரு வருடத்துக்கு சுமார் 250 முட்டைகள் வரை இடுகின்றன. இது, கோழி முட்டைகளை காட்டிலும், சுவை மிக்கதாகும். இதில், கோழி முட்டைகளை விட 3 முதல் 4 மடங்கு வரை அதிகமான உணவு சத்துகள் நிறைந்துள்ளன. கோழி முட்டையில் 11 சதவீத புரதம் உள்ளது. ஆனால், காடை முட்டையில் 13 சதவீத புரதம் இருக்கிறது. இதில், ‘பி2’ இரும்பு சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்து ஆகிய சத்துகள் கோழி முட்டையில் இருப்பதை விட அதிக அளவு இருக்கின்றன. மேலும், எச்.டி.எல். என்னும் கொழுப்பு சத்து உள்ளதால் வயதானவர்களும் இதை உண்ணலாம். காடை முட்டையில் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பு சத்து குறைந்து, மனித மூளையை இயக்கும் கோலின் என்னும் வேதியியல் பொருள் நிறைந்து உள்ளது.
புற்றுநோய்க்கு எதிராக...
இரத்த சோகை சிகிச்சைக்கு காடை முட்டைகள் உதவுகின்றன. ரத்தத்தில் உள்ள நச்சுக்களையும், உலோகங்களையும் வெளியேற்றுகின்றது. புற்றுநோய் பெருக்கத்தை தடுத்தும், அதற்கு எதிராகவும் செயல்படுகிறது. ஆண்களின் ஆண்மை தன்மையை மீட்க உதவுகிறது. நினைவாற்றல் மற்றும் மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது.நோய் எதிர்ப்பு சக்தியின் இயக்கத்தையும், உடல் உறுப்புகளையும் வலுவடைய செய்கிறது. இதய தசைகளை பலப்படுத்துகிறது. தோலின் நிறத்தை மேம்படுத்தும் வல்லமை கொண்டது.

2 முட்டைகள் சாப்பிடலாம்
காடை முட்டையின் மஞ்சள் கருவில் அதிகம் காணப்படுகின்ற கோலினிஸ்ட்ரேஸ் நொதி மூலம் அல்சைமர் நோய் உருவாகும் ஆபத்தை தடை செய்கிறது. தலை முடியை பராமரிக்கும் சாதனங்களுக்குப் பயன்படுகிறது.
குழந்தைகளுக்கு, உணவில் தினமும் இரண்டு காடை முட்டைகள் கொடுத்து வந்தால், நல்ல உடல் வளர்ச்சி பெற்று, தொற்று நோய்த் தாக்கத்திலிருந்து காப்பாற்றப்படுவார்கள். காடை இறைச்சியும், முட்டையும் கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்துள்ள உணவாக பயன்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினத்தந்தி பதிவு செய்த நாள்:வெள்ளி, ஜனவரி 30,2015, 10:09 AM IST

No comments:

Post a Comment