சருமத்தை சோர்வில்லாமல் எப்போதும் பொலிவுடன்வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்று அழகுக் கலைஞர் சுமதி சக்தியும், சருமப் பராமரிப்புக்கான விஷயங்களை அரசு மருத்துவர் ஹேமானந்தும், இங்கே விரிவாகத் தருகின்றனர்.
உணவு
தினசரி மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிப்பதன் மூலமும் உடல் ஆரோக்கியத்தையும், அழகையும் தக்கவைக்கலாம். தினமும் மூன்று வெவ்வேறுவிதமான பழங்களை எடுத்துக்கொள்வது சருமத்துக்குத் தேவையான வைட்டமின், நீர்ச்சத்தைத் தந்து, தோலில் வறட்சியைப் போக்கிப் பளபளப்பாக்கும். உணவில் பொன்னாங்கண்ணி மற்றும் கேரட் தினசரி சேர்த்துக்கொண்டால், சோர்வு நீங்கி முகம் எப்போதும் பிரகாசிக்கும்்.
பாதாம் பருப்பை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடுவது நல்லது. முகப்பருக்கள் வருவதற்கு அதிகக் கொழுப்பும் ஒரு காரணம். எண்ணெய்ப் பலகாரங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பாலை நன்கு காய்ச்சி அதில் இரண்டு பேரீச்சம்பழங்களைப் போட்டு, மறுநாள் காலை அருந்தலாம். முகத்தின் பளபளப்புக்கு பேரீச்சம் பழம் கேரன்டி.
பியூட்டி பார்லர்
பிளீச்சிங் செய்துகொள்வதைக் காட்டிலும் ஃபேஷியல் செய்து கொள்வது நல்லது. கெமிக்கல் ஃபேஷியல் செய்துகொள்வதால் தோல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம். முகத்தின் சருமமும் மிருதுத்தன்மையை இழந்து கரடுமுரடாக மாறலாம். ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், வாழைப்பழம் போன்ற இயற்கை முறையில் செய்யப்படும் பழ ஃபேஷியல் எல்லா வகை சருமங்களுக்கும் ஏற்றது. பக்க விளைவுகள் இல்லாதது. சருமத்துக்கான சத்துக்களுடன், நீர்ச்சத்தும் சேர்ந்து பளபளப்பைக் கூட்டும். மேலும், அழகு நிலையத்தில் முகத்துக்கு அக்குபிரஷர் சிகிச்சையும் கொடுக்கப்படுகிறது. இதனால் முகம் மற்றும் உடலின் இயக்கங்கள் தூண்டப்பட்டு, தலைவலி, டென்ஷன் குறைந்து மனதும், உடலும் ரிலாக்ஸாகும். ரத்த ஓட்டம் சீராகும். இந்த நிம்மதியே, முகத்தில் புத்துணர்ச்சியையும் பொலிவையும் தரும். மேலும் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிந்தாலும் வறண்டுபோனாலும் அதற்கும் பார்லரில் இயற்கை முறையில் தீர்வைத் தர முடியும்.
அசத்தலான அழகுக்கு!
வெளியில் சென்றுவிட்டு வந்த பிறகு, கெட்டியான மோரில் ஒரு வெள்ளைத் துணியை நனைத்து முகத்தின் மீது அப்படியே 10 நிமிடங்கள் வைத்திருப்பது புத்துணர்ச்சியைத் தரும்.
நன்றி : டாக்டர் விகடன் 16 Oct, 2014
No comments:
Post a Comment