Wednesday, August 30, 2017

நாட்டுக் கம்பு:


நம் முன்னோர்கள், தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல், வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில், இந்த தானிய வகைகளை மறந்து, சத்தற்ற உணவுகளை, சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால், நோய்களின் வாழ்விடமாக, நம் உடல் மாறிவிட்டது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில், வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது, அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாக காய்ச்சி, காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். 
மனச் சோர்வு இருந்தால், உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைபவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற, கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து, மதிய வேளையில் அருந்தி வந்தால், உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். 
அஜீரணக் கோளாறு கொண்டவர்கள், கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால், அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.
கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால், உடல் வலுவடையும்.
கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, பார்வையை தெளிவாக்கும்; இதயத்தை வலுவாக்கும்; சிறுநீரைப் பெருக்கும்; நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்; இரத்தத்தை சுத்தமாக்கும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்; நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும்; தாதுவை விருத்தி செய்யும்; இளநரையைப் போக்கும்.
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு, ஆரோக்கியமாக வாழலாம்.
நாலுபங்கு நாட்டுக்கம்பிற்கு ஒருபங்கு உளுந்தம்பருப்பு கலந்து கொஞ்சம் வெந்தயம் சேர்த்து முதல் நாள் இரவில் நீரில் ஊரவைத்து காலையில் க்ரைண்டரில் அரைத்தெடுத்து சிறிது உப்புச் சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ளவும். மாலை லேசாக புளித்து தோசைசுட ஏற்ற பக்குவம் வந்துவிடும். கம்பு தோசைக்கு நல்லெண்ணை பயன்படுத்தினால் ஆரோக்கியம் இன்னும் கூடும். தொட்டுக்கொள்ள தங்கள் விருப்பமுள்ள சட்னியோ குழம்போ பயன்படுத்தவும்..
மூலம் : Sudha Kalyan - to
 பிணி இல்லா பெருவாழ்வுக்கான உணவுமுறைகளும்,உடற்பயிற்சிகளும்.

No comments:

Post a Comment