Wednesday, March 18, 2015

முருங்கைக்கீரையின் வித விதமான சமையல் வகைகள் :

முருங்கைக்கீரைக் குழம்பு:
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை -2 டம்ளர்; துவரம்பருப்பு-100 கிராம்; சாம்பார் பொடி- 2 ஸ்பூன்; புளி- நெல்லிக்காயளவு; வெங்காயம்-2; தக்காளி-2; மஞ்சள் தூள்,எண்ணெய் உப்பு.
செய்முறை:
பருப்பை வேக வைத்து, நறுக்கிய தக்காளி, வெங்காயத்துடன் உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், புளி கரைசல் அனைத்தையும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கீரையைப் போட்டு , 3 நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு தாளித்து, பெருங்காயம் தூவி இறக்கவும். 2,3 கொதி வந்தால் போதும். அதிகமாக அடுப்பில் விட்டு வைத்தால், கசப்பாகிவிடும். இந்தக் குழம்பு சாதத்துடன் ஊற்றி சாப்பிட சுவையானது.

முருங்கைக்கீரை சட்னி:
தேவையான பொருட்கள்:
கீரை-2 டம்ளர்; உளுத்தம் பருப்பு-4 ஸ்பூன்; கடலைப் பருப்பு-3 ஸ்பூன்; காய்ந்த மிளகாய்-5; புளி, உப்பு
செய்முறை:
கீரையைத் தவிர மற்றவைகளைப் போட்டு வேக வைத்து, கடைசியில் கீரையைக் கலந்து 2 நிமிடம் வெந்ததும், தாளித்து இறக்கவும். இந்த சட்னியை, சாதத்துடன் சாப்பிடலாம். இட்லி, தோச முதலிய டிஃபனுடனும் சேர்த்து சாப்பிடலாம்.
முருங்கைக்கீரை அடை:
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை-2 டம்ளர்; கேழ்வரகு மாவு அல்லது கோதுமை மாவு-1 1/2 டம்ளர்; வெங்காயம்-2; மிளகாய்-5; பூண்டு-1; ஜீரகம் -1 ஸ்பூன்.
செய்முறை:
அனைத்தையும் உப்பு போட்டு பிசைந்து அடை தட்டவும். எண்ணெயில் பக்கோடா மாதிரியும் பொறிக்கலாம்.
முருங்கைக்கீரை பொரியல்:
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை- 2 டம்ளர்; வெங்காயம்-1 வேர்க்கடலை-50 கிராம்; காய்ந்த மிளகாய்-4.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெங்காயம் போட்டு, 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதித்ததும், கீரையைப் போட்டு , அடுப்பை லேசாக எரிய விடவும். வேர்க்கடலை, நறுக்கிய மிளகாயை வறுத்து பொடித்து கலந்து இறக்கவும்.

No comments:

Post a Comment